மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள்:
ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்த ஒரு விரிவான செய்தித் தொகுப்பு இதுவாகும்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள சூழலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், ஏழு முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளன.
அதில், பிரதமரின் “சூரிய கிரண்” திட்டத்தை ஒத்த வகையில், ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு 25 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்பதும், MSME நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் வங்கிக் கடன் இலக்குகளை உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக இடம்பெற்றுள்ளதாக, கொடிசியா தலைவர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் CGTMSE திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், 25 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 100 சதவீத உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது 75 சதவீத உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுவதால் வங்கிகள் கடன் வழங்க தயங்குவதாகவும், இதனால் உற்பத்தி வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் பாரம்பரிய விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாகவும், ரேப்பியர் தறிகளாகவும் மாற்ற வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் மானியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை சுமார் 50 சதவீத விசைத்தறிகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட கூலித் தொழிலாளர்களுக்காக செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் விசைத்தறிகளுக்கான மின்சார கட்டணம் சமீப காலங்களில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் கடும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறி கூடங்களில் சோலார் பேனல்கள் நிறுவ மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மேம்படும் என்ற நம்பிக்கை தொழில்துறையினர் மத்தியில் நிலவுகிறது.