அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும்
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், 2026–2027 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அந்த ஆய்வறிக்கையில், 2026–2027ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025–2026 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைந்துள்ளதால், தனியார் துறைகளுக்கு கடன் வசதி மேலும் எளிதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வரவிருக்கும் காலத்தில் நிதிப் பற்றாக்குறையை 4.4 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு, பிற வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களை ஒப்பிடுகையில் நிலைத்தன்மையுடன் வலுவாக வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் மிதமான அளவிலேயே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக இருந்த பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் 2.71 சதவீத வரம்பிற்குள் தொடர்ந்து இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 1ஆம் தேதி காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும், 2026–2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.