தேர்தல் காலத்தில் போராட்டம் ஒரு பழக்கமாகிவிட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
தேர்தல் நேரங்களில் போராடுவது தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு துறைகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவோம் என்று திமுக கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்ததாக நினைவூட்டியுள்ளார்.
அந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தக் கோரி மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை வைத்தபோது, “தேர்தல் காலத்தில் போராடுவது இப்போது ஒரு வழக்கமாகிவிட்டது” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்திலும், தங்களின் உயிர் பாதுகாப்பை மறந்து பொதுமக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவத் துறை ஊழியர்களை அவமதித்த அமைச்சரின் பேச்சுக்கு, தாம் கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கேள்வி எழுப்பும் மக்களையே இழிவுபடுத்துவது வழக்கமாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
2021 தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பத்து சதவீதம் கூட நிறைவேற்றாத நிலையில், 2026 தேர்தலை நோக்கி மீண்டும் ஒரு போலியான வாக்குறுதி குழுவை அமைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களை எவ்வளவு எளிதாக ஏமாற்றலாம் என நினைத்துள்ளார் என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.