பாதுகாப்பு தகவல்களை சேகரிக்க கல்வி-ஆராய்ச்சி வட்டாரங்களை வெளிநாட்டு உளவு அமைப்புகள் பயன்படுத்துகின்றன – யுஜிசி எச்சரிக்கை
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை திரட்டுவதற்காக, வெளிநாட்டு உளவு அமைப்புகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளுடன் தொடர்புடையவர்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாணவர்களிடம் உயர்கல்வி நிறுவனங்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாட்டின் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் நவீன உத்திகள், அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட ரகசிய விவரங்களை அறிந்து கொள்ள வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சீன உளவு அமைப்புகள் பல்வேறு வழிகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிக்க முயற்சி செய்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து நம்பகமான தகவல்களைப் பெற புதிய அணுகுமுறைகளை உளவு அமைப்புகள் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளங்களை பயன்படுத்தி, கள அனுபவம் கொண்டவர்களின் கட்டுரைகளுக்கு அதிக தொகை வழங்குவதாக விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகவும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசபக்தி அல்லது உணர்ச்சிவசப்படும் தலைப்புகளில் கட்டுரைகள் கோரும் நிறுவனங்களின் பின்னணி மற்றும் உண்மைத் தன்மையை, ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
தேசிய நலன், பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான விவரங்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோல் தனிநபர் வங்கி கணக்கு விவரங்கள், பான் எண், ஆதார் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அறிவுச் சூழலுக்கு எதிராக நடைபெறும் தகவல் போர்களில் யாரும் தரவு சுரண்டலுக்கு பலியாகக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.