தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் சமூக வலைதளங்களில் விற்பனை – சர்ச்சை
உயர்கல்வி மேற்கொண்டு வரும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினிகள், சமூக வலைதளங்கள் மூலம் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
கடந்த 5ஆம் தேதி, அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்படும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அந்த மடிக்கணினிகளை பெற்ற சில மாணவர்கள், அதில் இருந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை மறைத்து, தங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை ஒட்டி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்த நடவடிக்கை அரசு தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த இலவச மடிக்கணினிகளை விற்பனைக்கு வைக்கும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் மூலம், இந்த லேப்டாப்களை மாணவர்கள் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்து வருவதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவர்களுக்கு சாதனம் வழங்கியதும் அரசின் பொறுப்பு முடிவடையாது என்றும், அந்த மடிக்கணினிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா, அதன் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்காணிக்க தனியான செயல்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.