பயிர்கள் தொடர்பான டிஜிட்டல் கணக்கெடுப்பு இன்று முடிவு – தமிழகத்திற்கு 100 கோடி ரூபாய் இழப்பு அபாயம்
பயிர் விவரங்களை பதிவு செய்யும் டிஜிட்டல் சர்வே பணிக்கான இறுதி நாள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் தாமதமான செயல்பாடுகள் காரணமாக சுமார் 100 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கஃரீப் மற்றும் ராபி பருவங்களில் நடைபெறும் விவசாய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், இணைய வழியில் சேகரிக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விவசாய மானியங்கள் மற்றும் உர விநியோக அளவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்த பணிக்காக மத்திய அரசு தனிப்பட்ட மொபைல் செயலியை உருவாக்கி வழங்கியுள்ளது. அந்த செயலி மூலம் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த சர்வேக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த பணிகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசிடம் கால அவகாசம் கோரப்பட உள்ளதாகவும் வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.