இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு தீர்மானகரமான மாற்றம் : அண்ணாமலை
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி மையமான வளர்ச்சியை வேகப்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும், குறிப்பாக தமிழகத்திற்கு இது ஒரு “கேம் சேஞ்சர்” ஆக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜவுளி துறையில் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்படுவதன் மூலம், 263 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஜவுளி சந்தையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் எந்த அச்சமும் இன்றி போட்டியிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சென்னை, ஒசூர், கோவை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இருந்து வாகன உதிரி பாகங்கள், கடல்சார் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை மேலும் விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தோல் மற்றும் காலணி தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கப்படுவதால் வேலூர், ஆம்பூர் போன்ற தொழில் மையங்களுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என்றும், விவசாயிகள், மீனவர்கள் முதல் சிறு தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் பயன்களை அனுபவிக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.