“பூத் கமிட்டிக்கே ஆட்கள் இல்லை” என்ற விமர்சனம் : தளபதி பேச்சுக்கு காங்கிரசில் எதிர்ப்பலை
காங்கிரஸ் கட்சியை “பூத் கமிட்டி அமைக்க கூட உறுப்பினர்கள் இல்லை” என விமர்சித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதியின் கருத்துக்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கோ. தளபதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று ஆயிரம் முதல் நான்கு ஆயிரம் வாக்குகளே உள்ளதாக கூறினார். மேலும், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கக் கூடாது என்றும் அவர் பேசியது, இண்டி கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தளபதியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் மேடையில் கூட்டணி கட்சியை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் இழிவுபடுத்திய கோ. தளபதியின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ்குமாரும் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்பதுபோல் காரணமின்றி காங்கிரசை தாக்குவது பொறுப்பற்ற அரசியல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற கட்சிகளின் சீட் விவகாரங்களில் தலையிடுவது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்றும் சாடியுள்ளார்.
இத்தகைய பேச்சுகள், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான நல்லுறவுக்கும், இண்டி கூட்டணியின் ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், யாரும் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.