மணப்பாறை ரயில் நிலையத்தில் அந்யோதயா விரைவு ரயில் நிறுத்தம் : அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ரயில் நிலையத்தில் அந்யோதயா விரைவு ரயில் நின்று சென்றதை முன்னிட்டு, பாஜக, காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலிருந்து தாம்பரம் வரை இரு திசைகளிலும் இயக்கப்படும் அந்யோதயா விரைவு ரயில், ஜனவரி 26-ஆம் தேதி முதல் மணப்பாறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், மணப்பாறை ரயில் நிலையம் வந்த அந்யோதயா விரைவு ரயிலை வரவேற்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் கூடி, பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை ஆதரித்து கோஷமிட்டனர். அதே நேரத்தில், மதிமுகவினர் எம்பி துரை வைகோவுக்கு நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும், பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ரயில் ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மணப்பாறை ரயில் நிலையத்தில் அரசியல் கட்சிகள் மாறிமாறி கோஷம் எழுப்பியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.