குடியரசு தினத்திலும் உயிரைக் காவு வாங்கும் வகையில் மது விற்பனை – டாஸ்மாக் மாடல் அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
தேர்தல் செலவுகளுக்காக விடுமுறை நாட்களிலும் விதிமீறி மது விற்பனை செய்து, தமிழக பெண்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்க முயல்வது நியாயமா என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்ட திமுக அரசு, ஜனவரி 25ஆம் தேதி ஒரே நாளில் ரூ.220 கோடி 75 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை விற்றதாகவும், அதோடு நிற்காமல் ஜனவரி 26ஆம் தேதியிலும் பல இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் மதுவை அருந்தியதால் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழலில், மறைமுகமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் இத்தகைய மதுபானங்களை குடித்து உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து அறிவாலயத்தின் பொருளாதாரத்தை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்காக விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மது விற்பனை செய்து, தமிழக பெண்களின் தாலியை அறுக்கும் செயலில் ஈடுபடுவது முறையா? என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.