திருச்செந்தூர் தைப்பூச விழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தைப்பூச விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் வசதிகள் குறித்த விவாதங்களுடன், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடைபயணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைகளில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர் ஒட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பக்தர்கள் பயன்படுத்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.