புதிய காற்றழுத்தம் – 6 மாவட்டங்களில் கனமழை சாத்தியம்
வங்கக்கடலில் இன்று (அக். 24) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவிழந்து, தெற்கு கர்நாடகா உள்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வருகிறது. அதேசமயம், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி செல்லக்கூடும்.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், இன்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.
இதன் தாக்கத்தால் இன்று கோயம்புத்தூர் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மேலும், 26-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.