இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவு
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நடைபெற்று வந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக, வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்கள், 2022 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த ராஜேஷ் அகர்வால், இரு தரப்பும் இணைந்து நடத்தி வந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உடன்பாடு சமநிலை கொண்டதாகவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் என அவர் விளக்கினார்.
இரு தரப்புகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.