அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்தங்களில், தமிழ் மொழி இடம்பெறாமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் தமிழில் ஒரு எழுத்து கூட இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ள நிலையில், மாநகராட்சியே அந்த அரசாணையை மீறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நடவடிக்கை, தமிழின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பதாகவும், அரசு விதிமுறைகளை மதிக்காத செயலாகவும் பார்க்கப்படுவதால், தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.