சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை – வனத்துறையினரிடம் பொதுமக்கள் கடும் கேள்விகள்
கோவை மாவட்டம் குப்பனூர் அருகே, சேற்றுப் பகுதியில் சிக்கி தவித்த ஒற்றை காட்டு யானையை, வனத்துறையினர் சுமார் மூன்று மணி நேரம் நீண்ட முயற்சிக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்டனர்.
வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அந்த யானை, பேரூர், குப்பனூர், தீத்திபாளையம், கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குப்பனூரில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை, அங்கிருந்த ஆழமான சேற்றில் சிக்கி, வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடும் சூழல் உருவானது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சரிவு பாதையை உருவாக்கி, கயிறுகள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி யானையை மெதுவாக மீட்டனர்.
இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களாக யானை மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி வந்தது தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.