ஒரே இரவில் மாயமான 60 அடி இரும்புப் பாலம் – சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்
சத்தீஸ்கர் மாநிலத்தில், ஒரே இரவில் 60 அடி நீளமுள்ள இரும்புப் பாலம் திருடப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை ஆச்சரியமும் அச்சமும் அடையச் செய்துள்ளது.
கோர்பா மாவட்டத்தில் உள்ள தோதிபாரா கிராமப்பகுதியில் அமைந்த கால்வாயின் மீது, சுமார் 60 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இரும்பால் ஆன பாலம் ஒன்று இருந்தது. கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தப் பாலம், அப்பகுதி மக்களின் தினசரி போக்குவரத்திற்கான முக்கிய வழியாக இருந்து வந்தது.
சுமார் 30 டன் எடையுள்ள அந்த இரும்புப் பாலத்தை, அடையாளம் தெரியாத நபர்கள் இரவோடு இரவாக அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். வழக்கம்போல் காலையில் கால்வாயைக் கடக்க வந்த மக்கள், பாலம் காணாமல் போனதை பார்த்து திகைப்பில் உறைந்தனர்.
உடனடியாக தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கேஸ் கட்டர்களைப் பயன்படுத்தி இரும்புப் பாலத்தை துண்டுகளாக வெட்டி, திட்டமிட்டு திருடிச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடப்பட்ட பாலத்தின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. இதே இடத்தில் நீர் குழாயை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாதுகாப்பு அமைப்பையும் திருடர்கள் அகற்றிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, கேஸ் கட்டர்கள் மூலம் நீர் குழாயை சேதப்படுத்தாமல் விட்டதால், கோர்பா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிய தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து தப்பியுள்ளனர்.
இந்த துணிச்சலான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய, போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.