கேரள சட்டப்பேரவை தேர்தல்: ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர் – காங்கிரஸில் உட்கட்சி அதிருப்தி வெளிப்பாடு
கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனால், கேரள அரசியலில் முக்கிய முகமாகக் கருதப்படும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மேலிடம் தன்னுடைய கருத்துகள் மற்றும் பங்களிப்புகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கேரள காங்கிரஸ் தலைமை தன்னை திட்டமிட்டு ஓரங்கட்டுவதாகவும் சசி தரூர் நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வதாகவும் அவர் நெருக்கமான வட்டாரங்களில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் சசி தரூர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அவரது அதிருப்தியை மேலும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நிகழ்வில் ஏற்பட்ட அவமதிப்பை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தை அவர் திட்டமிட்டு தவிர்த்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் கேரள காங்கிரஸில் நிலவும் உட்கட்சி குழப்பங்களை வெளிப்படையாகக் காட்டுவதாகவும், தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் இது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசி தரூர் – காங்கிரஸ் மேலிடம் இடையேயான உறவு எவ்வாறு முன்னேறும் என்பதும், இந்த புறக்கணிப்பு எதிர்வரும் தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.