காதலனுடன் செல்ல முயன்ற மகள் – காவல் நிலையத்தில் கதறி அழுத பெற்றோர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காவல் நிலையத்தில், இளம்பெண்ணை உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சிமலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து ஆனந்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாச்சல் காவல் நிலைய போலீசார் காதலர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
மதன்குமாருடன் காவல் நிலையத்திற்கு வந்த ஆனந்தியை, அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். இதைக் கவனித்த போலீசார் உடனடியாக தலையிட்டு, அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தி இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
அந்த நேரத்தில், மகள் தங்களுடன் திரும்பி வர வேண்டும் எனக் கூறி பெற்றோர் காவல் நிலையத்திலேயே கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து, பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்த ஆனந்தியின் விருப்பத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், எழுத்து மூலம் உறுதி பெற்ற பின், இருவரையும் அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.