சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப் – ஜி ஜின்பிங்குடன் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவை எதிர்த்து வந்த கடுமையான அணுகுமுறையில் இருந்து விலகி, மீண்டும் நட்புறவை வலியுறுத்தும் நிலைப்பாட்டை எடுத்து வருவது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? அதற்கான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பு ஆராய்கிறது.
உலக அரசியல் மேடையில் மீண்டும் அதிர்வுகளை உருவாக்கி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள், அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளையே குழப்பத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகின்றன. கிரீன்லாந்து முதல் காசா வரை, ஐரோப்பா முதல் நேட்டோ நாடுகள் வரை, ட்ரம்பின் அணுகுமுறை வழக்கமான தூதரக மரபுகளைத் தாண்டி, மிரட்டலும் அழுத்தமும் நிறைந்ததாக மாறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சைகளின் மையமாக கிரீன்லாந்து விவகாரம் மாறியுள்ளது. ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள அந்த தீவை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உலக பாதுகாப்புக்குத் தேவையானது என்றும், இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அரசியல் ஆய்வாளர்கள், இதனை வர்த்தக வரிகள், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திய அரசியல் நாடகங்களின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றனர்.
அதே நேரத்தில், காசா பகுதியை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள புதிய “அமைதி வாரியம்” (Board of Peace) திட்டமும், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான கடுமையான வர்த்தகக் கொள்கைகளும், நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையையே சோதனைக்கு உள்ளாக்கியுள்ளன. வெனிசுலாவில் அமெரிக்க ஆதரவு கொண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து மீது ட்ரம்ப் நேரடியாக உரிமை கோரியதும் சர்வதேச அளவில் சர்ச்சையை தீவிரப்படுத்தியது.
இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் முக்கிய கவனம் பெற்றுள்ளன. கிரீன்லாந்து குறித்த அமெரிக்க நோக்கங்கள் புரியவில்லை என மேக்ரான் அனுப்பிய தனிப்பட்ட செய்தியை, ட்ரம்ப் பொதுவெளியில் வெளியிட்டது இருநாட்டு உறவில் பதற்றத்தை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, காசா அமைதி குழுவில் பங்கேற்க மறுத்த பிரான்சுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தது, ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், அமெரிக்க வரைபடங்களில் கனடா மற்றும் கிரீன்லாந்தை இணைத்து காட்டும் காட்சிகள் போன்றவை, ட்ரம்பின் அரசியலில் குறியீட்டு மிரட்டல்கள் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளதை வெளிப்படுத்துகின்றன. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியம் 93 பில்லியன் யூரோ மதிப்பிலான எதிர் நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனிலும், அமெரிக்காவுடனான ‘சிறப்பு உறவு’ முறிவின் விளிம்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இத்தகைய சூழலில், சீனாவை நோக்கி ட்ரம்ப் எடுத்துள்ள சமீபத்திய சமரசப் போக்கு, உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஏற்பட்ட நீண்டகால மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த பயணம் வழிவகுக்குமா, அல்லது இது தற்காலிக அரசியல் கணக்கீடா என்பதைக் காலமே நிர்ணயிக்க வேண்டும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.