உரிமையாளர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் தகன மேடையில் காத்த நாய் – நெஞ்சை உருக்கும் காட்சி
மத்தியப்பிரதேசத்தில், தனது உரிமையாளர் உயிரிழந்த பின்னரும் அவரை எதிர்பார்த்து தகன மேடையிலேயே காத்திருந்த நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களின் மனதை கலங்கடித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் படோரா கிராமத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரஜாபதி, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அவர் வளர்த்து வந்த நாயும் அருகிலேயே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகதீஷின் உடல் உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது, பிரிய மனமின்றி அவரது வளர்ப்பு நாயும் தொடர்ந்து உடன் சென்றது. பின்னர் இறுதிச்சடங்கின் போது ஜகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், எஜமானர் மீண்டும் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையுடன் அந்த நாய் தகன மேடையிலேயே படுத்து காத்திருந்தது.
ஜகதீஷ் உயிரிழந்த நாளிலிருந்து அந்த நாய் உணவு எதையும் உண்ணாமல், தண்ணீரும் குடிக்காமல் தன்னைத் தானே வருத்திக் கொண்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னால் சிரித்துப் பேசிவிட்டு பின்னால் பேசும் மனிதர்களைவிட, நன்றியுணர்வுடன் உண்மையான பாசம் காட்டும் வாயில்லா உயிரினங்களே மேலானவை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் உருக்கமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.