“5 ஆண்டுகளில் சாலை அமைப்புக்கு ரூ.78 ஆயிரம் கோடி செலவிட்டதாக கூறும் தமிழக அரசு – அந்த நிதி எங்கே சென்றது?” – அண்ணாமலை கேள்வி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை அமைப்புப் பணிகளுக்காக ரூ.78 ஆயிரம் கோடி செலவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அந்தப் பெரிய நிதி உண்மையில் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை மூலம் விளக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கர்நாடகா–தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில் குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி போன்ற மலைக் கிராமங்களுக்கு நேரடி சாலை வழி இல்லை. கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால்தான் அந்த கிராமங்களை அடைய முடிகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக காட்டாறு வெள்ளம் பெருக்கெடுப்பதால், போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு, மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான சாலைவசதி கோரி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்:
“திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்காக ரூ.78 ஆயிரம் கோடி செலவிட்டதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதி உண்மையில் எங்கே சென்றது என்பதை வெளிப்படையாக விளக்க முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சாலை வசதியற்ற மலைக் கிராமங்களுக்கு அவசர அடிப்படையில் சாலை மற்றும் உயர்மட்டப் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.