முழு பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளை வழிநடத்த வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆலோசனை
வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து முழு பயிர்க்காப்பீடு செய்யும் வழிகாட்டல் வழங்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் சூழலில், வேளாண்துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேதம், விதைகள், உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் இருப்பு, சம்பா நெற்பயிருக்கான காப்பீடு போன்ற விஷயங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கூட்டத்தின் முடிவில், அனைத்து அலுவலர்களும் மற்றும் களப்பணியாளர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும், விவசாயிகளை நேரில் சந்தித்து முழு பயிர்க்காப்பீடு செய்வது, வெள்ளம் தடுப்புக் நடவடிக்கைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்கும் ஆலோசனைகள் வழங்குவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பிரதேச விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி, துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவரிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் ஒருங்கிணைப்புடனும் முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வேளாண் இயக்குநர் முருகேஷ், சர்க்கரைத் துறை இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.