முதல்வர் ஸ்டாலின் ஒரு செயலையும் நிறைவேற்றவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், வெறும் நாடக அரசியலையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்றும் பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தனது X (ட்விட்டர்) பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
திமுக தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஒரு சிறு பகுதியைக்கூட நிறைவேற்றாமல், தினந்தோறும் புதிய நாடகங்களை அரங்கேற்றி, மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவராக, யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அதையே மனப்பாடம் செய்து வாசிக்கும் கிளிப்பிள்ளை போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.
Samagra Shiksha திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என கடிதம் எழுதி ஒப்புக்கொண்டுவிட்டு, பின்னர் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? செயல்படுத்தாத திட்டத்துக்கு மத்திய அரசு எப்படி நிதி வழங்கும்?
தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பாக, தென் மாநிலங்களில் எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2025 பிப்ரவரி மாதமே தெளிவாக கூறியுள்ளார். உங்களுக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லையோ? அல்லது உங்களுக்கு எழுதித் தருபவர்களுக்கும் அந்த பழக்கம் இல்லையா?
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமான நிலையில் இருக்கும்போது, ஆளுநர் உங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா? உங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைக்க ஆளுநரை குற்றம் சாட்டும் அரசியலை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து, ஐந்து ஆண்டுகள் ஆனபோதும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசு அதை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. இனி அந்த திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்பதால்தான் நீங்கள் இவ்வாறு புலம்புகிறீர்கள்.
மதுரை AIIMS மருத்துவமனை கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது. வேங்கைவயலுக்குப் போக நேரமில்லையெனில், மதுரைக்காவது சென்று பார்ப்பதற்குத் தடையா? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பாவிட்டாலும், இந்த ஆண்டே மதுரை AIIMS மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று கொடுத்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?
இயற்கை பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. 5000 கோடி ரூபாய் செலவிட்டும், ஒவ்வோர் ஆண்டும் சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிப்பதே உங்கள் அரசின் சாதனையாக உள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உங்கள் அரசு வேண்டுமென்றே தவறான DPR-ஐ அளித்தது நினைவிருக்கிறதா? திருத்திய DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க விருப்பம் உள்ளதா, இல்லையா?
கீழடி ஆய்வுகளை உலகளவில் கொண்டு செல்ல, கூடுதல் அறிவியல் ஆதாரங்கள் தேவை என மத்திய அரசு கூறுகிறது. அந்த ஆதாரங்களை வழங்க உங்கள் அரசுக்கு என்ன தயக்கம்?
நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் ஒரு வாய்ப்பாகவே உள்ளது. ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக மருத்துவ இடங்களை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த திமுக கும்பலுக்கே நீட் தேர்வு பிடிக்கவில்லை.
ஒரு காலத்தில் பிடிக்காதவர்களைப் பற்றி பொது கழிவறைகளில் கரித்துண்டால் எழுதும் பழக்கத்தை, AI காலத்திலும் தொடர வேண்டாம் முதல்வரே. இனியாவது மக்களுக்காக அரசியல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.