திமுக ஆட்சிக்கு முடிவுக் கட்டம் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி
திமுக தலைமையிலான ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி,
“தமிழகத்தின் சகோதர சகோதரிகளே, வணக்கம்” என்று தமிழில் வாழ்த்தி தனது உரையை தொடங்கினார்.
தமிழக மக்களின் வீரமும், தேசப்பற்றும் அவர்களின் இரத்த நாளங்களில் ஓடுகிறது எனக் குறிப்பிட்ட அவர்,
சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடினர் என்றும் நினைவுகூரினார்.
ஊழலில் மூழ்கிய திமுக ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும்,
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை NDA கூட்டணி உருவாக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
தமிழக மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.
திமுக அரசிடமிருந்து தமிழ்நாட்டை மீட்பதே NDA கூட்டணியின் முதன்மை இலக்கு என்றும்,
திமுக என்றால் CMC – குற்றம் (Crime), மாஃபியா (Mafia), ஊழல் (Corruption) என கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை; ஒரே குடும்பத்தின் நலனுக்காகவே திமுக அரசு செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரியும் என்றும்,
தமிழகத்தின் கலாச்சாரம், ஆன்மிக மரபுகள் நாட்டின் பெருமைகளாக விளங்குகின்றன என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு எவ்வளவு வேகமாக முன்னேறுகிறதோ, அதே அளவுக்கு இந்தியாவும் வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் கூறினார்.
திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழக வளர்ச்சி பின்னடைவை சந்தித்து வருகிறது என்றும்,
காங்கிரஸ்–திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
தமிழக மீனவர்கள், விவசாயிகளுக்கு NDA கூட்டணி உறுதியான ஆதரவு வழங்கி வருகிறது என்றும்,
கடந்த 11 ஆண்டுகளில் NDA அரசு தமிழக வளர்ச்சிக்காக இதுவரை இல்லாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இரட்டை இன்ஜின் அரசு உருவாகும் என்றும்,
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க NDA தலைமையிலான அரசால் மட்டுமே முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
திமுகவுக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றம்சாட்டிய அவர்,
ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் மட்டுமல்ல, யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.
NDA அரசின் முத்ரா திட்டத்தின் மூலம் தமிழக பெண்களும் இளைஞர்களும் பெரும் பயன் அடைந்துள்ளனர் என்றும்,
உலக முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாக இந்தியா இன்று விளங்குகிறது என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
உலகமே இந்தியாவை கவனித்து வரும் இந்நேரத்தில், தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால்தான் வளர்ச்சி வேகமாகும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் குற்றச் செயல்களும் ரவுடிகளின் அட்டகாசமும் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும்,
NDA அரசு ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர் வழங்கப்படும் – இது என் உறுதி என்றும் பிரதமர் அறிவித்தார்.
மேலும், NDA ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு திருக்குறளை பரிசாக வழங்கியதில் நான் பெருமை அடைகிறேன் என்றும்,
தமிழ் பண்பாட்டை பாராட்டுவதோடு மட்டுமல்ல, அதை பாதுகாக்கவும் உறுதியுடன் செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
முருகன் வழிபாட்டிற்காக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டபோது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக தலைவர்களை பாராட்டுகிறேன் என்றும்,
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு வாக்குவங்கி அரசியல் செய்தது என்றும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ்–திமுக ஆட்சிக்காலத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்றும்,
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து தமிழர் பாரம்பரியத்தை காத்தது NDA அரசே என்றும் பிரதமர் கூறினார்.
தமிழகத்தில் திறமைமிக்க மனித வளத்திற்கு எந்த குறையும் இல்லை என்றும்,
இளைஞர்களை நம்பி செயல்படும் அரசே இன்று தமிழகத்தின் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக இளைஞர்களுடன் கை கோர்த்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் அரசாக NDA கூட்டணி அரசு இருக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.