பெருந்துறையில் 11ஆம் வகுப்பு மாணவர் மரணம் – உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தூக்கிட்டு உயிரிழந்த 11ஆம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய முயன்ற அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் சஞ்சீவ் என்ற மாணவர் 11ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், பள்ளி விடுதி அறையில் அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சஞ்சீவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல்துறையினர் போராட்டத்திற்கு முயன்றவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.