கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த மூத்த சேவகர் லட்சுமணன் ஜி (வயது 86) இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
கோழிக்கோட்டில் பிறந்த லட்சுமணன் ஜி, கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை எனப்படும் புனித ஸ்ரீபாத பாறையை கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களது உரிமையாக்க முயன்று, அங்கு சிலுவையை நிறுவியதை எதிர்த்து போராடிய வீரர்களில் ஒருவராக விளங்கினார்.
அந்த அநியாய ஆக்கிரமிப்பைத் தகர்த்து, சிலுவையை அகற்றி கடலில் எறிந்த துணிச்சல்மிக்க ஐந்து இளைஞர்களில் லட்சுமணன் ஜியும் ஒருவர் என்பது வரலாற்றுச் சிறப்பு பெற்ற நிகழ்வாகும்.
மாண்புமிகு ஏக்நாத்ஜியின் வழிகாட்டுதலும் நேரடி கண்காணிப்பும் கீழ், தேசத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கும் புனித முயற்சியில், பாரதமாதாவின் திருவடிகளில் தன் உயிரையே அர்ப்பணிக்கத் தயார் ஆன தியாக மனப்பான்மையுடைய மனிதராக அவர் திகழ்ந்தார்.
விவேகானந்தர் பாறையை மீட்டெடுப்பதிலும், அங்கு விவேகானந்தர் நினைவுச் சின்னம் உருவாகும் பணியிலும், தன்னை முழுமையாக ஒப்படைத்து வாழ்ந்த ஒரு தூய தேசபக்த ஆன்மா ஸ்ரீ லட்சுமணன் ஜி.
அவரது தியாக உணர்வும், அசைக்க முடியாத தைரியமும், தலைமுறை தலைமுறையாக தேசபக்தர்களை பாரதமாதாவின் சேவைக்காக எழுச்சி பெறச் செய்யும். அவருடன் உரையாடியதும், பழகியதும் மனதில் என்றும் நீங்காத நினைவுகளாகத் தங்கியிருக்கும்.
லட்சுமணன் ஜியின் தியாகத்திற்கும் வீரத்திற்கும் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆழ்ந்த மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறோம்.
வந்தே மாதரம்.