பங்குத் தந்தை வராததால் சடலத்துடன் போராட்டம் – கிராமத்தில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில், பங்குத் தந்தை இல்லாத காரணத்தால் இறந்தவரின் உடலை முன்வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் இறுதி சடங்குகளுக்காக தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் அங்கு நிரந்தர பங்குத் தந்தை இல்லாததால், அருகிலுள்ள மற்றொரு கிராமத்திலிருந்து ஒரு பங்குத் தந்தை அழைத்து வரப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குழு போராட்டத்தில் ஈடுபட்டதால், புதுக்குப்பம் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
இந்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இறந்தவரின் உடலை வைத்தே உறவினர்களும் ஒரு தரப்பு கிராம மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.