பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து
பழனி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் மூன்று நாட்கள் கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அனைத்து வழிகளிலும் பக்தர்களுக்கு திறந்து வைக்க முடிவு செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில், 26ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வு தேரோட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பக்தியோடு பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்துள்ளனர்.
கோயில் நிர்வாகம், ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அனைத்து வழிகளிலும் பொதுத் தரிசனத்திற்கு அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கும் கட்டண தரிசனத்தை ரத்து செய்யவும், அனைத்து வழிகளிலும் பக்தர்களை அனுமதிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், வழக்கமான நாட்களில் 200 ரூபாய் கட்டணத் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு மின்விசிறி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பக்தர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.