என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் – அண்ணாமலை மகிழ்ச்சி
அமமுக கட்சியின் பொதுச்செயலாளரும், தனது நெருங்கிய நண்பருமான டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்தில் இணைந்துள்ளமை பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள், தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மற்றும் தமிழரின் மரியாதைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும், ஊழலில் மூழ்கியதும் நிர்வாகத் திறன் அற்றதுமான திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் நடந்துவரும் ஊழல் முறைகேடுகளை பொதுமக்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான தலைமைத்துவத்தையும், நேர்மையான நல்லாட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு ஒரு உறுதியான, ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதே எமது இலக்காகும் என்றும் அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.