சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீன் ரத்து மனு: 23ம் தேதி தீர்ப்பு அறிவிப்பு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, வரும் 23ஆம் தேதி உத்தரவு வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு, சில கடும் நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன்பே இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை சார்பில் தற்போது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும், சாட்சிகளையும் அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், விசாரணை அதிகாரியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் பெற்றபோதிலும், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார் எனவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் தரப்பு, இந்த வழக்கில் நீதிபதிகள் பாரபட்சமாக முடிவெடுக்கலாம் என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தது.
அதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை மிரட்டி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் கடுமையாக எச்சரித்தனர். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகளை அவமதிக்க முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், காவல்துறை அதிகாரிகளை மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதை சவுக்கு சங்கருக்கு அவரது தாயார் தான் அறிவுரை வழங்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி உத்தரவு ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.