அமைதியின் நிலமாக இருந்த தமிழகத்தை அச்சத்தின் நிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் ‘சாதனை’
சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், உணவு டெலிவரி பணியில் ஈடுபட்ட ஒருவரை மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் அரிவாளால் தாக்கும் கொடூரக் காட்சி வெளியாகி, பார்ப்பவர்களின் மனதை உலுக்கியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சாலைகள் என எந்த இடத்தை எடுத்தாலும், போதையில் ஆயுதங்களுடன் மனிதர்களை துரத்தி வெட்டுவதும், குத்தி கொலை செய்வதும், காட்டுமிராண்டித் தாக்குதல்களும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.
குற்றவாளிகளுக்கு போதை, ஆணவம், துணிச்சல் ஆகியவை எல்லை மீறி, ஆளும் அரசை பற்றிய எந்த அச்சமும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. திமுக ஆட்சியில் எப்போது யாருக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் தங்கள் நாளந்தோறும் வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வெளியில் செல்ல கூட அஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்றால், அந்த ஆட்சி அதிகாரத்தில் தொடர தகுதியற்றது என்பதே அதன் அர்த்தம். ஆனால், “குற்றங்களை இரும்புக் கரத்தால் ஒழிப்பேன்” என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,
தனது இரும்புக் கரம் முற்றிலும் துருப்பிடித்து பலவீனமடைந்துவிட்டதை உணராமல், “நாடு போற்றும் நல்லாட்சி” என்ற கனவு உலகிலேயே மிதந்து கொண்டிருக்கிறார். இத்தகைய மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் இனியும் தொடர வேண்டுமா என்ற கேள்வி இன்று எழாமல் இல்லை.