மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் புகார்
மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன சம்பவத்தில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தன்னை அலைக்கழிப்பதாக தாய் மகேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரிக்கு மதுரையில் தூய்மை பணியாளர் வேலை கிடைத்ததைத் தொடர்ந்து, குடும்பத்துடன் மதுரை கூடல்புதூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், 45 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மகேஸ்வரியின் கணவர் ஆறுமுகம் பண்டிதர் உயிரிழந்தார். இதனால் குடும்பம் கடும் மனஅழுத்தத்தில் இருந்து வரும் சூழலில், கடந்த 14ஆம் தேதி டீ வாங்க சென்ற மகேஸ்வரியின் மனவளர்ச்சி குன்றிய மகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மகேஸ்வரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது மகளை மீட்டு தர காவல்துறை உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.