பெண் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு: மத்திய திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு?
பெண் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு’ திட்டத்தை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், நிர்பயா நிதியின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பெண்களுக்கான உதவி மையங்கள் உருவாக்குதல், சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறை பணியாளர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தை தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, கோவா, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இத்திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட ‘சுற்றுலாத் தளங்களில் பெண்கள் பாதுகாப்பு’ குறித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம்பெறாதது, சுற்றுலா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.