இசை மேதை இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது அறிவிப்பு
புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ‘பத்மபாணி’ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசு இணைந்து, ஆண்டுதோறும் அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில், கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ‘பத்மபாணி’ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியின்போது, மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது வழங்கப்பட இருப்பதாக விழா ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இந்த விருதுடன் நினைவுச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.