நாளை முதல் தொடங்குகிறது நிரந்தர காலவரையற்ற வேலைநிறுத்தம்
காலமுறை அடிப்படையிலான ஊதியம், குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சத்துணவு பணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு மையங்களில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
பணிச்சுமை அதிகரித்து, மன அழுத்தத்துடன் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் நிரந்தர வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
முறையான காலமுறை ஊதியம், குடும்பத்தினருக்கான பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தப்படவுள்ளதால், நாளை முதல் பெரும்பாலான சத்துணவு மையங்கள் இயங்க முடியாத நிலை உருவாகும் என சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.