சென்னை பல்கலைக்கழகத்தில் செனட் கூட்டம் நடைபெறாததால் நிர்வாகப் பணிகள் முடங்கல்
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 9 மாதங்களாக செனட் கூட்டம் கூடவில்லை என்பதால், பல்வேறு முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை பல்கலைக்கழகத்தில், இதுவரை துணைவேந்தர் நியமனம் நடைபெறாததால் நிர்வாகத் தடைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாக அமைப்பான செனட் குழு ஆண்டுக்கு குறைந்தது இருமுறை கூட வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், அந்த நடைமுறை பின்பற்றப்படாததால் அவசியமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாமல் நிர்வாகம் குழப்பத்தில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செனட் கூட்டம் இல்லாத காரணத்தால், தேர்வு நடத்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலையில் தேர்வு கட்டுப்பாட்டாளர் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தேர்வுகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாகவும் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்வியை முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புகளுக்கோ, வெளிநாட்டு உயர்கல்விக்கோ செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், செனட் குழுவில் இடம்பெற்றிருந்த பல உறுப்பினர்கள் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தலும் இதுவரை நடத்தப்படவில்லை என பேராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.