மெட்ரோ ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள்: பயன்பாட்டை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மெட்ரோ ரயில்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென மெட்ரோ ரயில்களில் தனிப்பெட்டிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, ஒவ்வொரு மெட்ரோ பெட்டியிலும் உள்ள மொத்த 50 இருக்கைகளில், 14 இருக்கைகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறையில் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என வாதிட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பெட்டி ஒதுக்கும் விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயில்களில் திடீர் ஆய்வுகளை நடத்தி, ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த இருக்கைகள் ஒழுங்காகப் பயன்படுத்தப்படுவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை 30 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.