கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையில், தவெக தலைவர் விஜய் பெயர் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் இரண்டாவது முறையாக ஆஜரானார். முன்னதாக நடைபெற்ற விசாரணையில் அவர் அளித்த விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிரமான குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
பரப்புரை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தது தொடர்பாக அதிகாரிகள் தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்படும் என கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.