வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில், இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட 97 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 13 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.