சீனாவில் நோரோ வைரஸ் தாக்கம் – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
சீனாவில் பரவி வரும் நோரோ வைரஸ் தொற்றால், நூற்றுக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் வழக்கமாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படும். மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ், உலகளாவிய அளவில் பொது சுகாதாரத்துக்கு சவாலாக இருந்து வருகிறது.
இந்த நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கடும் வாந்தி, தீவிர வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 68.5 கோடி பேரை இந்த தொற்று பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள போஷான் நகரிலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில், 100-க்கும் மேற்பட்டோர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவர்களின் உடல்நிலை தற்போது நிலையானதாக இருப்பதாகவும், உயிர் ஆபத்து ஏதும் இல்லை எனவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தீவிர சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.