காணும் பொங்கல் கோலாகலம் – தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து களைகட்டியது.
சென்னை மெரினா கடற்கரையில், குடும்பங்களாக வந்த பொதுமக்கள் உற்சாகமாக நேரத்தை கழித்தனர். குதிரை சவாரி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுபோல், கன்னியாகுமரி கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள், கடலில் நீராடி காணும் பொங்கலை குதூகலமாக கொண்டாடினர். திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்திலும் ஏராளமான மக்கள் கூடிச் சஞ்சரித்து பண்டிகை மகிழ்ச்சியை அனுபவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மாவட்ட அறிவியல் மையத்தை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர். வேலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர் கோட்டையை சுற்றுலா பயணிகள் வியப்புடன் சுற்றிப் பார்த்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில், இமயமலை தோற்றத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வடிவமைப்பில் ஏறி பொதுமக்கள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் கூடி ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மலைப்பகுதியான கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கு வந்த பயணிகள், அங்குள்ள இயற்கை அழகில் மெய்மறந்து நேரத்தை செலவிட்டனர். அதேபோல், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள மீன் கடைகளில் மீன்களை வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.