பாகிஸ்தான் பயனற்றது; இந்தியா முன்னேற்றத்தின் சின்னம் – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
இந்தியாவின் பொருளாதார வலிமை மற்றும் அமெரிக்காவுக்கு அது அளிக்கும் பங்களிப்புகளை, பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரிச் மெக்கார்மிக், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்து உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தானை விமர்சித்த அவர், அந்த நாடு அமெரிக்காவிற்கு பயனளிக்கும் முதலீடுகளையோ, பொருளாதார பங்களிப்புகளையோ வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு மாறாக, இந்தியா அமெரிக்காவில் முதலீடுகளை கொண்டு வருவதோடு, அங்கிருந்து முதலீடுகளை ஈர்த்து தனது பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த திறமையான மனித வளமே பல அமெரிக்க நிறுவனங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை குறிப்பிட்ட மெக்கார்மிக், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் எரிசக்தியைப் பெறும் நோக்கில் அந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதை உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம் எனவும் அவர் கூறினார்.