கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் வணிக வளாகங்களும் குடியிருப்புகளும் கட்டப்படுவதை தடுக்க, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி. பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் உட்பட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். மனுதாரர் தரப்பில், “கோயில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டப்படக் கூடாது, ஆனால் பல கோயில்களில் இந்த உத்தரவை மீறி கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன” என குற்றச்சாட்டினர்.
தமிழக அரசின் தரப்பில், “கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அரசு அறநிலையத் துறை சட்டத்தில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள திருத்தங்கள் செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி கோயில் நிலத்தில் கட்டுமானம் தொடர அனுமதி வழங்கினர். அதே சமயம், அந்த கட்டிடங்களை அறநிலையத் துறை சட்டப்படி பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். மனுவிற்கு நவம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு வணிக வளாகம் கட்டக்கூடாது என சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு வழங்கப்பட்டது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.