நிபா வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம் – சுகாதாரத்துறை விளக்கம்
தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ள தேவையில்லை என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவோர் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும், தன்னிச்சையான சிகிச்சை முறைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழங்களை முறையாக சுத்தம் செய்து மட்டுமே உண்ண வேண்டும் என்றும், வௌவால்கள் அல்லது நோயுற்ற விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
நோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் அவசியமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வதந்திகளுக்கு இடம் அளிக்காமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், பொதுமக்கள் அமைதியுடன் இருப்பது அவசியம் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.