திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்
தமிழக அரசியலில் திமுகவுடனான கூட்டணியை தொடர்வதா, அல்லது தவெக (தமிழக வெற்றி கழகம்) உடன் புதிய அரசியல் இணைப்பை ஏற்படுத்துவதா என்ற கேள்வியில் காங்கிரஸ் கட்சி கடும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. கட்சியின் ஒரு தரப்பு திமுகவுடனான கூட்டணியை ஆதரிக்க, மற்றொரு தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைப்பதே எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்கும் என வலியுறுத்தி வருகிறது. இதனால், காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சியில் பங்கு அவசியம் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகாரில் ஏற்பட்ட கடும் தோல்வியை தொடர்ந்து, கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைத்து வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள், அதிக இடங்களில் போட்டி மற்றும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தீவிரப்படுத்தியதை அடுத்து, திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்த சூழலில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் மேலிடம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தனர்.
அந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு சமம் என்றும், இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்காத தவெக போன்ற புதுக் கட்சியை நம்பி திமுகவை விட்டு வெளியேறினால் காங்கிரஸுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றும் சில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதே நேரத்தில், தவெக புதுக் கட்சியாக இருந்தாலும் மக்களிடையே அதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாகவும், காங்கிரஸுக்கு மரியாதை அளிக்காத திமுகவை விட்டு வெளியேறுவது தான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். தவெகவுடன் கூட்டணி அமைந்தால் 60 தொகுதிகள் வரை பெற முடியும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருபுறம் கேரளத்தின் திருவனந்தபுரம், மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட இடங்களில் பாஜக தொடர்ந்து வெற்றி முத்திரைகளை பதித்து வரும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது.
காங்கிரஸ் தானாகவே கூட்டணியில் இருந்து வெளியேறும் என எதிர்பார்த்திருந்த திமுகவினருக்கும், டெல்லி மேலிடத்தின் தற்போதைய நிலைப்பாடு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, திமுக–காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.