பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் நிகழ்வு – போலீசார் இடமாற்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது
சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது காவலர்கள் நடனமாடியதாக வெளியான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இடமாற்ற நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பணியாற்றிய 23 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும், பல்லாவரம் காவல் ஆய்வாளர் பழனிகுமார் மற்றும் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த உத்தரவை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காவலர்களின் கலாச்சார நிகழ்வை தண்டனைக்குரிய செயலாகக் கருதியது நியாயமல்ல என்ற கருத்துகள் பரவலாக பகிரப்பட்டன.
இதையடுத்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 23 காவலர்களுக்கான உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, அவர்கள் மீண்டும் தங்களது முந்தைய காவல் நிலையங்களிலேயே பணியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், காவல் ஆய்வாளர்கள் பழனிகுமார் மற்றும் தயாள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் தொடர்வார்கள் என்றும் தாம்பரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.