30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1993 முதல் 1996 வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் கல்லூரி வளாகத்தில் மீண்டும் ஒன்றுகூடி சந்திப்பு நிகழ்வை நடத்தினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்கள், மாணவ வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் மற்றும் நினைவுகூரத்தக்க தருணங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்க, சமூக வலைதளங்கள், செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் மூலம் நீண்ட நாட்களாக தொடர்பின்றி இருந்த நண்பர்கள் மீண்டும் இணைக்கப்பட்டனர்.
தொடர்பு கொள்ள இயலாத சில நண்பர்களை கண்டறிய, பழைய கால முறையைப் பின்பற்றி கடிதங்கள் அனுப்பி தேடி கண்டுபிடித்து நிகழ்வில் பங்கேற்கச் செய்தது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சந்திப்பு நிகழ்வின் போது, கல்லூரி கால நினைவுகள் மட்டுமல்லாது, வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், பெற்ற முன்னேற்றங்கள் குறித்தும் முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை அறிமுகப்படுத்தி, சிறப்பு விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்ச்சியுடன் நிகழ்வை நிறைவு செய்தனர்.