பரமக்குடி அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 33 பயணிகள் உயிர் தப்பினர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பயணித்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பயணிகளுடன் பெங்களூரு செல்லும் வழியில் இருந்த அந்த பேருந்து, மருச்சுக்கட்டு பகுதியில் சென்ற போது கியர் பெட்டி பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக சுயநினைவுடன் செயல்பட்டு, பேருந்தில் இருந்த 32 பயணிகளை விரைவாக வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை பலத்த போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், பேருந்து முழுமையாக தீக்கிரையாகி சேதமடைந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.