தேர்தல் வழக்குகளை விரைவாக முடிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் எதிராக தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, தேர்தல் வழக்குகள் ஆறு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும் என்ற மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இவ்வாறு உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவில்,
“தேர்தல் வழக்குகள் குறித்த காலத்தில் முடிக்கப்படாமல் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பது, தேர்தலின் புனிதத்தையும் ஜனநாயக நடைமுறையையும் பாதிக்கிறது. அதனால் உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்”
என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வச்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் உட்பட அமர்வு,
“தேர்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்ட நீதிபதிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்டவர்கள் முறையிடலாம். மற்ற நீதிபதிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது”
என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து முடித்தது.