தோட்ட இல்லத்தில் மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா
மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, காரைக்குடி அருகே அமைந்துள்ள தனது தோட்ட இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பாரம்பரிய முறையில் விழாவைக் கொண்டாடினார்.
இந்த நாளில், அவர் வளர்த்து வரும் மாடுகளை முதலில் குளிப்பாட்டி, வண்ண அலங்காரங்களுடன் அழகுபடுத்தினார். தொடர்ந்து, மாடுகளுக்கு வெண் பொங்கல், பல்வேறு பழவகைகள் உள்ளிட்ட படையல்களை வைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
வழிபாடு நிறைவடைந்த பின், படையலாக வைக்கப்பட்ட உணவுகளை மாடுகளுக்கு வழங்கி, மாட்டுப் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
மேலும், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சமூக வலைதளமான X தளத்தில் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“உலக உயிர்கள் அனைத்திற்கும் உணவை வழங்கும் உழவர் பெருமக்களுக்கு இனிய உழவர் திருநாளான மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள். உழவுக்கும் விவசாயிகளுக்கும் துணை நிற்கும் மாடுகளை பாதுகாத்து பேணுவோம். உழவுத் தொழிலுக்கும், உழவர்களுக்கும் வணக்கம். பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங்கல்…!” என குறிப்பிட்டுள்ளார்.